இந்தக் கட்டுரையை நான் எழுதுவதற்கு என்னுடைய மகனின் நண்பன் தான் காரணம். என்னுடைய மகன் பொறியியல் படித்த அவனுடைய நண்பனிடம் என்னுடைய வலைதளமான vijayakumaran.in கொடுத்து நான் எழுதிய புத்தகங்களையும் கட்டுரைகளையும் படிக்க சொல்லி இருந்தார் கொஞ்சம் மட்டும் படித்த நிலையில் என்னுடைய வீட்டிற்கு மகனை பார்க்க வந்தவரும் நானும் உரையாடியதை இந்த கட்டுரையில் பதிவு செய்திருக்கின்றேன். அவர் என்னிடம் சொன்னது உங்களுடைய புத்தகத்தை படிக்கும்போது சரியாக தான் இருக்கு,படித்து முடித்த பிறகு ஏற்றுக்கொள்ள முடியாதது போல் இருக்கிறது, படித்த பிறகு தூக்கமே வரவில்லை இதைப்பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்தேன் என்றும், அதிக புத்தகங்களை படிப்பீர்களா!எப்படி உங்களால் இப்படி எழுத முடிகின்றது என்றும் கேட்டார். நான் அவரிடம் சொன்னேன் அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த புத்தகத்தைத் தவிர மற்ற புத்தகங்களை நாம் படித்ததே இல்லை. கதை, நாவல், இலக்கியம் என்று படித்திருந்தால் நான் எழுதியிருக்கவே மாட்டேன், காரணம் அந்த கற்பனை குப்பைகள் என் மூளையில் சேர்த்து என் சிந்தனையை மக்க வைத்திருக்கும் என்றேன்.
நான் எழுதியவை அனைத்தும் யாரும் இதுவரை இந்த உலகில் சொல்லாதவை, அனைத்தும் என்னுடைய அனுபவத்தாலும் பிறப்பால் நான் பெற்ற உணர்வாலும் சுயமாக சிந்தித்து எழுதியவை.நான் புத்தகத்தை படித்துவிட்டு எழுதி இருந்தால் நான் படித்த புத்தகத்தின் தாக்கம் தான் என்னுடைய எழுத்தில் இருந்திருக்கும்,புதியதாக என்னால் சிந்தித்து எதையும் எழுதி இருக்க முடியாது என்றேன்.
ஆன்மீகம், நாத்திகம், முற்போக்கு சிந்தனை, பகுத்தறிவு என்று அனைத்தும் அவரவர் நலனுக்காக மக்களை நம்ப வைக்க, மூளை சலவை செய்ய உருவாக்கப்பட்ட கருத்தாக்கம் என்பதை நான் உணர்ந்ததால் புத்தர், விவேகானந்தர், திருவள்ளுவர் என்று யார் சொன்னதையும் நான் என்னுடைய அறிவாக எடுத்துக்கொள்ளாமல் சுயமாக வாழ்க்கையைப் பற்றி சிந்தித்ததால் தான் புத்தர், விவேகானந்தர், திருவள்ளுவர் என்று யாரும் சொல்லாததை என்னால் சொல்ல முடிந்தது என்றேன்.
“நீ என்னவாக வேண்டும் என்று நினைக்கின்றாயோ அதுவாகவே ஆவாய்” என்று புத்தர் சொன்னார், நான் அதற்கு ஒரு படி மேலே சென்று நீ என்னவாக வேண்டும் என்று நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய் ஆனால் எதை நினைக்க வேண்டும் என்பதை நீ தீர்மாணிக்க முடியாது என்று நான் கூறினேன். நாம் சுயமாக எதை ஒன்றையும் சிந்திக்க முடியாது, இறந்தகால தொடர்போடுதான் நம்முடைய சிந்தனை இருக்கும், நம் சிந்தனையின் அடிப்படையில் தான் நம் செயல் இருக்கும் என்பது விதியின் பயனால் நான் பெற்ற அறிவு. என்னுடைய சிந்தனையால் நான் இந்த அறிவைப் பெற்று இருந்தாலும் அந்த சிந்தனையை விதியின் பயனால் தான் நான் கிடைக்கப்பெற்றேன். இதில் எனக்கு எந்த தற்பெருமையும் இல்லை என்று நான் பெற்ற அறிவே எனக்கு சொன்னதால், புத்தர், விவேகானந்தர், திருவள்ளுவர், என்று யாரும் சொல்லாததை நான் சொல்லி இருக்கின்றேன் என்று நான் சொல்வதின் நோக்கம் தற்பெருமைக்காக அல்ல என்னுடைய எழுத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என்று நான் சொன்னவுடன், சுற்றி விட்டது போல் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.
சிறிது நேரம் கழித்து அவர் கேட்ட கேள்வி ஒரு மனிதனுடைய சிந்தனைக்கும், செயலுக்கும் அவனே காரணம் என்ற அடிப்படையில் தான் உலகம் முழுவதும் குற்றவியல் தண்டனை சட்டம் இருப்பதால், நம்முடைய சிந்தனைக்கும், செயலுக்கும் நாம் காரணம் அல்ல என்று நீங்கள்சொன்னது தான் முதன்மையானது என்று எடுத்துக் கொள்கிறேன், ஆனால் விதி உண்மை என்றும் கடவுள் இல்லை என்றும் நீங்கள் சொல்வதற்கு முன்பே பலரும் அதை நம்புகின்ற பொழுது நீங்கள் தான் முதலில் சொன்னதாக சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்றார், அதற்கு நான் சொன்னேன் நம்பிக்கை அடிப்படையில் தான் கடவுள் இல்லை என்றும் விதி உண்மை என்றும் சொல்கின்றார்கள் ஆனால் நான் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து சொல்லி இருக்கின்றேன். நாத்திகர்கள் கடவுள் இல்லை என்பது அறிவின் வெளிப்பாடு அல்ல நம்பிக்கையின் வெளிப்பாடு என்பதற்கு சான்று நாத்திகர்கள் விதியை பொய் என்று சொல்வது தான். ஆன்மீகவாதிகள் விதியை உண்மை என்பது அறிவின் வெளிப்பாடு அல்ல நம்பிக்கையின் வெளிப்பாடு என்பதற்கு சான்று விதியை உண்மை என்று சொல்லிக்கொண்டே கடவுள் இருக்கின்றார் என்று சொல்வதுதான்.
நம்முடைய சிந்தனையும் செயலும் நம் கட்டுப்பாட்டில் இல்லை தொடர்வினையின் கட்டுப்பாட்டில் இருப்பதை நான் அறிந்ததால் விதி உண்மை என்பதை அறிவியல் பூர்வமாக உறுதி செய்தேன். விதியை மீறி இந்த பிரபஞ்சத்தில் எந்த சக்தியும் இல்லை என்பதால் கடவுள் இல்லை என்பதை உறுதி செய்தேன். நான் ஆய்வு செய்து எழுதியது போல் உலகில் யாரும் விதியைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் ஆய்வு செய்து எழுதாததால் எந்த புத்தகத்தை படித்திருந்தாலும் நான் பெற்றிருக்கும் அறிவை பெற்றிருக்க முடியாது.
படித்தால் தான் அறிவாளியாக ஆக முடியுமா என்றால் இல்லை என்பதுதான் என்னுடைய பதில், காரணம் படிக்காத பலர் அறிவாளியாக வாழ்ந்து இருக்கின்றார்கள் என்பதனால் படித்தவர்கள் அனைவரும் அறிவாளிகளா என்றால் இல்லை என்பதுதான் என்னுடைய பதில், காரணம் படித்த பலர் முட்டாளாக வாழ்ந்து கொண்டு இருப்பது தான் இதற்கு சான்று. படிக்காதவர் அனுபவத்தால் அறிவைப் பெற முடியும் ஆனால் அனுபவம் இல்லாமல் படிப்பதால் யாராலும் அறிவை பெற முடியாது. எனவே படித்தவர்களை அறிவாளியாக இந்த சமுதாயம் பார்ப்பது மிக மிக தவறு.
ஒருவர் அறிவை அனுபவத்தின் மூலமும் பிறப்பின் மூலம் மரபணுவின் வழியாக வந்த உணர்வின் மூலமும் தான் பெறுகின்றார். அறிவுக்கு அனுபவம் முக்கியம் என்பது போல் பிறப்பால் பெரும் உணர்வும் அறிவுக்கு முக்கியம்.அனுபவத்தால் நாம் பெரும் அறிவு நம் உணர்வின் விருப்பப்படி தான் மூளையில் சேகரித்து வைக்கப்படுகின்றது. உதாரணத்திற்கு ஒருவர் தண்ணீர் நமக்கு கொடுத்த அனுபவத்தை அரை சொம்பு தண்ணீர் கொடுத்தார் என்றும் நினைவில் வைத்துக் கொள்ளும், அரை சொம்பு தண்ணீர் இல்லாமல் குறையாக கொடுத்தார் என்றும் அவரவர் உணர்வுக்கு தகுந்தார் போல் ஒரே அனுபவத்தை உணர்வின் விருப்பப்படி நினைவில் அறிவாக வைத்துக் கொள்ளும்.
படிப்பதன் மூலம், அல்லது கேட்பதன் மூலம் நாம் பெரும் தகவலை உணர்வின் விருப்பத்துக்கு ஏற்புடைய தகவலை மட்டும்தான் அறிவாக ஏற்றுக்கொள்ளும். உணர்வுக்கு எதிரான கருத்துக்களை, தகவலை தன்னுடைய அறிவாக மாற்றுவதற்கு முன்பே உணர்வு நிராகரித்து விடும், அதனால் தான் ஒவ்வொருவரின் நீதியும் அவரவர் உணர்வின் விருப்பப்படியே இருக்கின்றது. உதாரணத்திற்கு தாழ்ந்த சாதியினர்,சாதி அடிப்படையில் ஆன ஒதுக்கீடு முறையை ஆதரிப்பதும், உயர்ந்த சாதியினர் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு முறையை ஆதரிப்பதும் உணர்வால் பெற்ற அறிவே காரணம் என்று சொன்னேன்.
சிறிது நேரம் யோசித்தவர் உங்களுடைய புத்தகத்தை, கட்டுரையை படிக்கும் போதும் நீங்கள் சொல்வதை கேட்கும் போதும் உங்களுடைய கருத்தில் தவறில்லை என்றுதான் தோன்றுகின்றது ஆனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அது எதனால் என்றார். அதற்கு நான் சொன்ன பதில் புதிய தகவல் உங்களுடைய உணர்வுக்கு எதிராக இருப்பதால் அறிவாக ஏற்க உங்கள் உணர்வு மறுப்பது தான் காரணம்.இதுநாள் வரை நீங்கள் ஒரு பழத்தை பத்து ரூபாய் என்று பத்துப்பழத்தை 90 ரூபாய்க்கு வாங்கி வந்தீர்கள் கணிதம் தெரிந்தவுடன் 90 ரூபாய் தவறு 100 ரூபாய் கொடுக்க வேண்டும் என்ற உடன் கணிதத்தை மனது ஏற்காதது போல் தான் இதுவும். என்னுடைய எழுத்தும் கணிதத்தை போல் படிப்படியாக ஒவ்வொரு நிலையிலும் தெளிவுபடுத்திக் கொண்டே தான் வரும் படிப்பவர்களும் ஒவ்வொரு நிலையையும் சிந்தித்து ஏற்றுக் கொள்வார்கள் ஆனால் இறுதியில் விடையை சொன்னதும் பலர் ஏற்க மாட்டார்கள் காரணம் அவர்களுடைய உணர்வு ஏற்பதில்லை.
கணிதத்தில் விடையை மட்டும் தெரிந்து வைத்துக் கொள்வது தவறு, அதுபோல் திருக்குறள் ஒன்னே முக்கால் வரியில் விடையை மட்டும் தான் சொல்கின்றது விடையை மட்டும் தெரிந்து கொண்டால் அது தகவலாக தான் இருக்கும் அறிவாக மாறாது.ஆனால் திருக்குறளை படித்தவர்கள் திருக்குறளை நினைவில் வைத்திருப்பதாலேயே தன்னை அறிவாளியாக நினைக்கின்றார்கள் இது மிகப் பெரிய அறியாமை. திருக்குறளை படித்தவர்களுக்கு திருக்குறள் அறிவை கொடுக்கவில்லை தகவலை தான் கொடுக்கின்றது என்பது இது நாள் வரை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் திருக்குறளை படிக்காத நான் அறிவைப் பற்றி ஆய்வு செய்து திருக்குறள் தகவலை தான் கொடுக்கின்றது அறிவை கொடுக்கவில்லை என்று எழுதி இருக்கின்றேன்.
அறிவு என்பது வேறு, தகவல் சேகரிப்பு என்பது வேறு, கணிதத்தை ஒவ்வொரு படியாக எழுதி விடையை கண்டுபிடித்தால் அது அறிவு. விடையை மட்டும் நினைவில் வைத்திருந்தால் அது தகவல் சேகரிப்பு.
கணிதம் என்பது அறிவியல் அது அனைவருக்கும் ஒரே விடையை தான் கொடுக்கும், அதுபோல் அறிவியல் படி கணிதம் போல் படிப்படியாக ஆய்வு செய்தால் அனைவருக்கும் ஒரே விடை தான் கிடைக்கும். ஆனால் கணிதம் தெரியாமல் நம் உணர்வுக்கு யார் சொன்ன விடை சாதகமாக இருக்கின்றதோ அதையே அறிவாக ஏற்றுக்கொண்டு புத்தர் சொன்னார், காந்தி சொன்னார், திருவள்ளுவர் சொன்னார், பெரியார் சொன்னார் என்று மேற்கோள் காட்டுவது அறிவின் வெளிப்பாடு அல்ல. தன் உணர்வு எதை விரும்புகின்றதோ அதை நியாயப்படுத்தும் செயல்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கணியன் பூங்குன்றனார் சொல்லியிருக்கின்றார் என்று நாம் அப்படியே ஏற்றுக்கொள்வது அறிவு அல்ல, அதற்கான காரணத்தை சொல்லி சொன்னால் தான் அது அறிவாக படிப்பவரிடம் இருக்கும், இல்லை என்றால் கணிதம் தெரியாமல் விடையை மட்டும் தெரிந்து கொண்டு அந்த விடை நமக்கு சாதகமாக இருந்தால் நாம் பிரதம மந்திரி மோடி அவர்கள் மற்ற நாடுகளுக்கு செல்லும் போது அல்லது தமிழ்நாடு வரும்போது மட்டும் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று சொல்வது நாங்கள் எங்கு வேண்டுமானாலும் புலம் பெயரெல்லாம் இதை தடுக்காதீர்கள் என்பதற்காக. திரு கணியன் பூங்குன்றனார் சொன்னது மோடி அவர்களுக்கு அறிவாக மாறி இருந்தால் இந்தியாவில் குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்து பலரின் குடியுரிமையை கேள்விக்குறியாகி இருக்க மாட்டார்.
நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு புதிய தகவலை உள்வாங்கிக் கொண்டால்தான் ஆறாவது அறிவை பெற முடியும் என்று என்னுடைய ஆய்வின் மூலம் நான் தெரிந்து கொண்டேன். நான் படித்து தெரிந்து கொள்ள நான் ஆய்வு செய்து எழுதியது போல் இதுவரை யாரும் எழுதவில்லை.எனவே நான் எழுதியது அனைத்தும் விதியின் பயனால் நான் சிந்தித்து பெறப்பட்ட அறிவே என்று அவரிடம் தெளிவுபடுத்தினேன். பொறுமையாக அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டவர் கடைசியாக ஒரு கேள்வியை கேட்டார் அறிவில் வேறு உலகத்தில் இருக்கும் நீங்கள் எங்களை எல்லாம் பார்த்தால் எப்படி இருக்கும் உங்களுக்கு என்று.அதற்கு நான் சொன்னேன் நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு சிந்தித்து ஆறாவது அறிவை பெற முடியாத ஐந்து அறிவு மனிதர்களாக தான் ஆயிரத்தில் 999 பேரை நான் பார்க்கின்றேன். இது அவர்களின் தவறு அல்ல விதி, 16 வருடங்களுக்கு முன் நானும் உங்களில் ஒருவராக தான் இருந்தேன் என்றேன்.

Leave a Reply