நம்முடைய செயல்கள் உணர்வின் வெளிப்பாடா?அறிவின் வெளிப்பாடா?


உலக மக்கள் அனைவரும் மொழிபெயர்த்து படிக்க வேண்டிய கட்டுரை இது,நாம் முதலில் நம்மைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும், நம்மைப் பற்றி புரிந்து கொண்டால்தான் மற்றவர்களை நம்மால் புரிந்து கொள்ள முடியும். நம்மை நம்முடைய உணர்வும், அறிவும் தான் இயக்குகின்றது, உணர்வு பிறப்பின் மூலம் மரபணு வழியாக நமக்கு வருவதால் உடன் பிறந்தவர்களாக இருந்தாலும் ஒவ்வொருவர் உணர்வும் வேறுபட்டு இருக்கும், குறிப்பாக ஆண் உணர்வு பெண் உணர்வில் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருக்கும்.எனவே ஆணின் அறிவும் பெண்ணின் அறிவும் வேறுபட்டு இருக்கும்.

அறிவு என்பது நம் உணர்வின் விருப்பத்திற்கு ஏற்ப ஐந்து புலன்களால் பெரும் அனுபவம் தான் அறிவு. இந்த உலகில் ஒவ்வொரு மனிதனின் உணர்வும், அனுபவமும் தனித்துவமானது என்பதால் யாருடைய அறிவையும் யாராலும் அளவிட முடியாது, ஆனால் ஒருவரின் செயல் அவரின் உணர்வின் வெளிப்பாடா, அல்லது அறிவின் வெளிப்பாடா என்று கண்டுபிடித்து விடலாம்.
பலர் பல நேரம் உணர்வின் விருப்பப்படியே செயல்படுவார்கள்.
சிலர் சில நேரம் மட்டுமே உணர்வின் விருப்பப்படி செயல்படுவார்கள் பல நேரம் அறிவின் வழிகாட்டுதல் படியே செயல்படுவார்கள்.
பலரிடம் உணர்வின் விருப்பமே அறிவாகவும் இருக்கும் அப்படிப்பட்டவர்கள் தன்னுடைய செயல்களை அறிவுப்பூர்வமான செயலாகவே எண்ணி செய்வார்கள், இந்த மூன்றாவது வகை மனிதர்கள் தான் நம் சமுதாயத்தில் அதிகம் இவர்களால் தான் சமுதாயத்தில் பிரச்சனைகளும் அதிகம்.

கடவுள் நம்பிக்கை உடையவர்களுக்கு கடவுளை பற்றிய கதைகளே அறிவாகவும் இருக்கும்.
கடவுளின் பெயரால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு கடவுள் மறுப்பே அறிவாகவும் இருக்கும்.
உயர்ந்த சாதியினருக்கு சாதி அடிப்படையில் ஆன இட ஒதுக்கீடு தவறு என்பது அறிவாக இருக்கும்.
தாழ்த்தப்பட்டவருக்கு சாதி அடிப்படையில் ஆன இட ஒதுக்கீடு சரி என்பது அறிவாக இருக்கும்.
தொழிலாளிக்கு முதலாளித்துவ ஒழிப்பே சரி என்பது அறிவாக இருக்கும்.
முதலாளிக்கு தொழிலாளியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே சரி என்பது அறிவாக இருக்கும். இதுபோல் ஒருவரின் உணர்வின் விருப்பமே அவர்களின் அறிவாக இருப்பதால் ஒவ்வொருவருக்கும் ஒன்று நீதியாக தெரிகின்றது,அதனால் தான் கணவன், மனைவியாக இருந்தாலும் அண்ணன்,தம்பியாக இருந்தாலும் குடும்பத்துக்குள்ளேயே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.சாதிகளுக்கு இடையே, மதங்களுக்கு இடையே, மாநிலங்களுக்கிடையே, நாடுகளுக்கு இடையே என்று கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு அது வளர்ந்து கலவரமாகவும், யுத்தமாகவும் வெளிப்படுகின்றது.

கணிதம், அறிவியல், மருத்துவம், மொழி இலக்கண புத்தகத்தைத் தவிர கவிதை, நாவல், இலக்கியம்,கதை, ஆன்மீகம் போன்ற புத்தகங்கள் அனைத்தும் நம் உணர்வை தூண்டக்கூடிய புத்தகங்கள் தான். இது போன்ற உணர்வை தூண்டக்கூடிய புத்தகங்களை எழுதியவர்களும்,படித்தவர்களும் தன்னை அறிவாளியாக நினைத்து அறியாமையில் வாழ்பவர்கள் தான் அதிகம்.

பகவத் கீதை, பைபிள், குர்ஆன் போன்ற சிறந்த மத நூல்களே மக்களுக்கு அறிவை கொடுக்கவில்லை. நான் சொல்வதை நம்பு, இதுதான் நீதி, இதை செய் என்று தான் மதநூல்கள் சொல்கின்றன. அறிவு என்றால் உணர்வுக்கு அப்பாற்பட்டு நமக்கு அது புரிய வேண்டும், அப்படி புரிந்தால் தான் அது அறிவு அப்படிப்பட்ட புரிதலை மதங்கள் மனிதனுக்கு கொடுக்கவில்லை. திருக்குறளாக இருந்தாலும் இதுதான் சரி என்று சொல்கின்றதே தவிர எந்த அடிப்படையில் சரி என்று தெளிவு படுத்தவில்லை.
திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் உலகப் பொதுமறையாக இருந்தாலும் அனைத்து குரலையும் யாரும் ஏற்கவில்லை,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு”

என்ற முதல் குரலையே முற்போக்குவாதிகளாக இருக்கும் பகுத்தறிவாளர்களாக இருக்கும் தமிழ் பற்றாளர்களே ஏற்றுக் கொள்ளவில்லை.காரணம் அவர்களுடைய அறிவுக்கு கடவுள் நம்பிக்கை அறிவாக தெரியவில்லை எனவே அதை ஏற்க அவர்கள் தயாராக இல்லை.

எந்த திருக்குறள் யாருடைய உணர்வுக்கு சாதகமாக உள்ளதோ அதை மட்டும் எடுத்து அவரவர்கள் விருப்பத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்றார்கள். எனக்கு திருக்குறள் எந்த அறிவையும் கொடுக்கவில்லை காரணம் திருக்குறள் எனக்கு எதையும் புரிய வைக்கவில்லை நம்ப தான் சொல்கின்றது. ஆனால் பலர் திருக்குறளை படித்து நினைவில் வைத்துக் கொண்டதாலேயே தன்னை அறிவாளியாக நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

நேர்மையாக இருக்க வேண்டும், ஒழுக்கமாக இருக்க வேண்டும், இல்லாதவர்களுக்கு தர்மம் செய்ய வேண்டும், ஆணவம் கூடாது, பொறாமை கூடாது, திருடக்கூடாது, பொய் சொல்லக்கூடாது, மற்றவர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது, பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய்ய வேண்டும், கடவுள் உன்னை பார்த்துக்கொண்டே இருக்கின்றார் உன் செயலுக்கான பலனை கொடுக்க என்று ஆன்மீக புத்தகங்கள் மக்களை நம்ப வைக்க முயல்கின்றன ஆனால் எந்த மதமும் புரிய வைத்து அறிவை கொடுக்கவில்லை. இந்த இடத்தை நான் எழுதிய “குமார் விதிகள்” என்ற ஆய்வு புத்தகமும், ஆய்வு கட்டுரைகளும் பூர்த்தி செய்கின்றது.

ஒவ்வொருவரும் தன்னுடைய ஒவ்வொரு செயலையும் உணர்வின் வெளிப்பாடா, அறிவின் வெளிப்பாடா என்றும், நாம் பெற்றிருக்கும் அறிவு உணவின் விருப்பப்படி நமக்குள் வந்ததா அல்லது நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்ட நிலையில் வந்ததா என்று ஆய்வு செய்து நம்மை நாம் புரிந்து கொண்டால், நம்மை நாம் நெறிப்படுத்திக் கொண்டு இன்பமான வாழ்க்கையை வாழலாம்.

Category: