துறவு என்பது நான் என்ற உணர்வில் இருந்து விடுபடுவது, ஞானம் என்பது ஆறாது அறிவின் மூலம் வாழ்வியலை ஆய்வு செய்வது, இது இரண்டும் ஞானத்தின் இரு நிலைகள். முதல் நிலை, நான் என்ற உணர்வில் இருந்து விடுபட பயிற்சி எடுக்கும் நிலைதான் துறவு. இரண்டாவது நிலை, நான் என்ற உணர்வில் இருந்து விடுபட பழகிய பிறகு அதன் மூலம் ஆறாவது அறிவை பெற்று ஆறாவது அறிவின் மூலம் பெரும் அறிவே ஞானம், ஞானம் அடைந்தவர் தான் ஞானி. எனவே ஞானி என்று பெயர் வைத்துக் கொண்டவர்கள் ஞானி அல்ல, நான் என்ற உணர்வை ஆளுமை செய்து ஞானம் பெற்றவர்களே ஞானிகள்.
மிதிவண்டி ஓட்டுவதை படித்தோ, கேட்டோ கற்றுக்கொள்ள முடியாது, ஓட்டி பழகி தான் கற்றுக்கொள்ள முடியும், அதுபோல்தான் நான் என்ற உணர்வில் இருந்து விடுபடுவதும் பழக்கத்தின் மூலம் தான் சாத்தியம். அதனால் தான் ஞானத்தை பெற வேண்டும் என்பதற்காக முன்னோர்கள் துறவு வாழ்க்கையை வாழ்ந்து ஞானத்தை அடைந்திருக்கின்றார்கள். புத்தர், பட்டினத்தார், வள்ளலார் போன்றவர்கள் துறவு வாழ்க்கையால் ஞானத்தை பெற்றவர்கள்.
உலகில் உள்ள அனைத்து மதமும் துறவு வாழ்க்கை வாழ்பவர்களை இறைவனின் அருளை பெற்ற மனிதர்களாக பார்ப்பதற்கு காரணம், அவர்கள் பெற்றிருக்கும் ஆறாவது அறிவுதான். அறிவு பற்றிய என்னுடைய ஆய்வின்படி பகுத்தறிவு ஆறாவது அறிவு அல்ல, நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு சிந்திக்கும் போது நாம் பெரும் அறிவே ஆறாவது அறிவு.
படிப்பின் மூலம் எந்த ஒரு மனிதனும் ஆறாவது அறிவை பெற முடியாது, பழக்கத்தின் மூலம் தான் ஆறாவது அறிவை பெற முடியும். நேர்மையாக இருக்க வேண்டும் என்று படித்துவிட்டால் படித்தவர் நேர்மையாக இருக்க மாட்டார், நேர்மையாக இருக்க பழக வேண்டும் பழக்கத்தின் மூலம் தான் ஒருவர் தன் உணர்வை ஆளுமை செய்து நேர்மையாக வாழ முடியும், நம் உணர்வு எப்போது நம் ஆளுமைக்கு கட்டுப்படுகின்றதோ அதுதான் துறவு நிலை, உணர்வை ஆளுமை செய்து உழைப்பதும் ஒரு துறவு நிலைதான், துறவு என்பது உணர்விலிருந்து விடுபடும் பயிற்சி, துறவு என்பது பள்ளியில் மாணவனை முதல் வகுப்பில் சேர்ப்பது போல், ஞான நிலை என்பது மேல்படிப்பை முடித்து வெளியே வருவது போல்.
பேருக்கும், புகழுக்கும், தற்பெருமைக்கும், ஆணவத்திற்கும் ஆசைப்பட்டு தன் வாழ்க்கையை யார் வடிவமைத்து கொண்டாலும் அவர்கள் அனைவரும் ஐந்தறிவு மனிதர்கள் தான். அந்த வகையில் பதவிக்கு ஆசைப்படும் அரசியல்வாதிகள் அனைவரும் ஐந்தறிவு மனிதர்கள்தான். எவ்வளவு படித்திருந்தாலும், உயர் பதவியில் இருந்தாலும் ஒழுக்கம் இல்லாமலும், லஞ்சம் வாங்குபவர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஐந்தறிவு மனிதர்கள் தான்.
அறிவைப் பற்றிய அறிவை நான் பெற்ற பிறகு நான் பார்க்கும் மனிதர்களில் ஆயிரத்தில் ஒருவர் மட்டுமே ஆறறிவு மனிதராக எனக்கு தெரிகின்றார்கள் மற்றவர்கள் அனைவரும் எவ்வளவு படித்திருந்தாலும், உயர் பதவியில் இருந்தாலும் பெரிய செல்வந்தராக இருந்தாலும் ஐந்தறிவு மனிதர்களாக தான் எனக்கு தெரிகின்றார்கள்.
ஒரு மனிதன் தன்னுடைய பழக்கத்தால் உணர்வை ஆளுமை செய்து நேர்மையாக, ஒழுக்கமாக, உழைத்து வாழ்கின்றான் என்றால் அவர் இந்த சமுதாயத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம், அப்படிப்பட்ட மனிதரை கைகூப்பி வணங்குகின்றேன்.

Leave a Reply