வாழ்க்கை என்றால் என்ன? எதற்காக நாம் பிறந்தோம்? எதை நோக்கி நம் வாழ்க்கை பயணம் இருக்க வேண்டும்? வாழ்க்கையின் பொருள் என்ன? எப்படி வாழ்க்கையை வாழ வேண்டும்? சாதிப்பது தான் வாழ்க்கையா?பனம் சம்பாதிப்பது தான் வாழ்க்கையா? பேரும், புகழும் தான் வாழ்க்கையா? ஆன்மிகம் தான் வாழ்க்கையா? எதற்காக நாம் வாழ்கின்றோம்? அதற்கான விடையைத் தேடி தான் இந்த கட்டுரை.
நான் என்றால் என்ன? நான் என்பது உடலின் உணர்வு, ஒவ்வொரு உடலும் அந்தந்த உடலை நான் என்று நினைத்துக் கொள்வது உயிரின் தன்மை, ஒரு உயிர் உருவாகும் போதே நான் என்ற உணர்வும் சேர்ந்து உருவாவதால் வாழ வேண்டும் என்ற உணர்வு ஒவ்வொரு உடலுக்கும் இயற்கையாகவே ஏற்படுகின்றது.உடலின் இயக்கம் நின்று விட்டால் நான் என்ற உணர்வும் போய்விடும், எனவே மரணம் என்பது நான் என்ற உணர்வுக்கு கிடைத்த விடுதலை. நான் என்று நம்மை நாம் நினைப்பது கானல் நீரைப்போல் மாயை, எனவே உயிர், முற்பிறவி, மறுபிறவி, பேய் என்று எதுவும் இல்லை, பல மூலக்கூறுகளின் செயற்கையால் உடல் உருவாகின்றது அதன் வாழும் காலம் முடிந்தவுடன் மீண்டும் பல கூறுகளாக பிரிந்து வேறு ஒரு உருவமாக மாறிவிடுகின்றது,இயற்கையின் பார்வையில் அனைத்து உயிர்களும் ஒன்று தான், எனவே நம் உடல் வாழ்வதற்கு என்ன தேவையோ அதை நம் உடலின் உணர்வுக்கும் கொடுத்தாலே போதும் அதுதான் வாழ்க்கை.
விதி இருக்கா? விதிப்படிதான் நாம் பிறக்கின்றோமா? விதிப்படிதான் நாம் வாழ்கின்றோமா? விதிப்படிதான் இறக்கின்றோமா ? என்பது நம் பலரின் கேள்வி. விதிப்படிதான் அணு முதல் பிரபஞ்சம் வரை அனைத்தும் இயங்குகின்றது எனவே நம்முடைய பிறப்பு, வாழ்வு, இறப்பு அனைத்தும் விதிப்படியே நடக்கின்றது. விதியைப்பற்றி தெளிவாக புரிந்து கொள்ள நான் எழுதிய “குமார் விதிகள்” என்ற புத்தகத்தை படியுங்கள்.
நம்முடைய சிந்தனையும், செயலும் நம் கட்டுப்பாட்டில் இல்லை. சுயமாக நாம் எதையும் சிந்திக்க முடியாது கடந்த கால நிகழ்வுகளின் தொடர்போடுதான் சிந்திக்க முடியும். நேற்றைய நிகழ்வுகள் தான் இன்றைய நிகழ்வுக்கு ஆதாரமாக உள்ளது, இன்றைய நிகழ்வுகள் தான் நாளைய நிகழ்வுகளுக்கு ஆதாரமாக உள்ளது, விதியை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி இந்த உலகில் எதற்கும் இல்லை என்பதால் கடவுள் இல்லை.
கடவுள் இல்லை என்றாலும் இல்லாத கடவுள் இருட்டினில் வழி துணையாய் வருவது போல் கடவுள் நம்மை காப்பார் துன்பத்திலிருந்து விடுவிப்பார் என்று நம்முடைய துன்பத்தை கடவுளை நம்பி இறக்கி வைப்பதன் மூலம் நமக்கு நன்மைகள் நடக்கும். இது கடவுளின் செயல் அல்ல நம்முடைய மனதின் செயல்.கடவுள் நம்பிக்கை பலருக்கு கைத்தடியாக இருப்பதால் அவர்களுடைய கடவுல் நம்பிக்கைக்கு மாற்றாக விதியை பற்றிய அறிவை கொடுக்காமல் கடவுள் இல்லை என்று சொல்லி அவர்களின் கடவுள் நம்பிக்கையான கைத்தடியை பிடுங்குவது தவறு.
கடவுள் இல்லை என்றாலும் கடவுளை போல் விதி எனும் தொடர்வனை நம்முடைய சிந்தனையையும், செயலையும் ஒரு கணம் கூட இடைவிடாமல் இருட்டிலும் பார்த்துக் கொண்டே இருக்கின்றது எதிர்வினைக்காக. யார் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் நம்முடைய செயலுக்கு எதிரி வினை உண்டு. எனவே நாம் வாழ்வது கடந்த கால நிகழ்வுகளின் தொடர்வினையாலும், நம் செயலின் எதிர்வினையாலும் தான். எனவே நம்முடைய நாளைய விதி நல்ல விதியாக இருக்க வேண்டும் என்றால் இன்றைய நம் செயல் நல்ல செயலாக இருக்க வேண்டும்.
ஆனந்தமான வாழ்க்கைக்கு விதியை பற்றிய புரிதல் மிக மிக அவசியம், நம்முடைய சிந்தனைக்கும், செயலுக்கும் உலக நிகழ்வுகளுக்கும் கடந்த கால நிகழ்வுகளின் தொடர்வினையே காரணமாக இருப்பதால் விதி உண்மை என்பது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்படுகின்றது. விதி தொடர்வினையோடு தொடர்பு உடையதாக இருப்பதால், விதிப்படி அனைத்தும் நடக்கும் என்றால் தொடர்வினையின் தொடர்போடு தான் அனைத்தும் நடக்கும் என்று பொருள். எனவே வெற்றி நாளைய விதியாக நமக்கு இருக்க வேண்டும் என்றால் இன்று முயற்சியும், உழைப்பும் நம் செயலாக இருக்க வேண்டும். விதி என்பது இயற்கையின் செயல்பாடு இயற்கை நம்மை எப்படி இயக்குகிறது என்று புரிந்து கொண்டால் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
உடலின் உணர்வை பூர்த்தி செய்து வாழ்வதுதான் நிறைவான வாழ்க்கை. உடலின் விருப்பம் தான் உணர்வின் விருப்பமாக இருந்தாலும், உணர்வின் விருப்பம் என்பது வேறு, மாய்ய உணர்வின் விருப்பம் என்பது வேறு.
உடலின் விருப்பம் – ஆரோக்கியம், பசிக்காகவும் சுவைக்காகவும் உணவை சாப்பிடுவது,மெய் இன்பம்,காம இன்பம்,பாசம் போன்றவை உடலின் விருப்பம்.
மாயை உணர்வின் விருப்பம் – பசிக்கு சாப்பிட்ட பிறகும் உடலின் தேவைக்கு மேல் சாப்பிடுவது, மெய்யின் தேவைக்கு மேல் இன்பத்தை அனுபவிப்பது,உடலின் தேவைக்கு மேல் காமத்தை அனுபவிப்பது, பயம், பொறாமை, புகழ், சுற்றுலா, கேளிக்கை, ஆன்மீகம், பெருமை, ஆணவம், போன்றவை மாயை உணர்வின் விருப்பம். மாயை உணர்வின் விருப்பத்தை அனுபவிக்காமலேயே அறிவால் மாயை உணர்வை நிறைவு படுத்திக் கொள்ள முடியும், ஆனால் உடலின் விருப்பத்தை அனுபவிக்காமல் நம்முடைய அறிவால் நிறைவு படுத்திக் கொள்ள முடியாது. எனவே ஒருவரின் நிறைவான வாழ்க்கை என்பது உடலின் விருப்பத்தை பூர்த்தி செய்வதில் தான் இருக்கின்றது.
உடலின் தேவைக்கு மேல் சாப்பிடுவது, தேகத்தின் தேவைக்கு மேல் இன்பத்தை அனுபவிப்பது, தேவைக்கு மேல் காமத்தை தவறான வழியில் சென்று அனுபவிப்பது, பயத்தால், பொறாமையால் இன்பத்தை இழப்பது, புகழுக்காக, பெருமைக்காக உழைத்து உடலின் இன்பத்தை கெடுத்துக் கொள்வது, சுற்றுலாவுக்கும்,கேளிக்கைகளுக்கும் சென்று செல்வத்தை அழிப்பது போன்றவை வாழ்க்கைக்கு தேவை இல்லாதவை.
ரூபாயின் மதிப்பு அனைவருக்கும் ஒன்றல்ல, நாட்டுக்கு நாடு ரூபாயின் மதிப்பு மாறுவது போல் மனிதர்களுக்கு மனிதர் ரூபாயின் மதிப்பு மாறுபடுகின்றது, செல்வந்தர்களுக்கு ரூபாயின் மதிப்பு மிகவும் குறைவு. ஏழைகள், உழைப்பாளிகளுக்கு ரூபாயின் மதிப்பு மிக அதிகம்,உழைத்து சுயமாக சம்பாதிப்பவரகள் ரூபாய்க்கு அதிக மதிப்பு கொடுப்பார்கள். முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்தை அடுத்த தலைமுறை இடம் ஒப்படைக்காமல் அதை விற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்களுக்கு ரூபாயின் மதிப்பு மிகக் குறைவாக தான் இருக்கும். ரூபாயின் மதிப்பு குறைவாக உள்ளவர்களுடன் தன்னை ஒப்பிட்டு தேவையில்லாத மாயை உணர்வுக்காக வரும்கால வாழ்க்கையை இழப்பவர்கள் அதிகம்.
வாழ்க்கையை பற்றிய அறிவு இல்லாதவர்கள் பதவி, அதிகாரம், புகழ், சாதனை, பெருமை,மது, கேளிக்கை என்று யாரும் பெறாததை நாம் பெறுவது தான் வாழ்க்கையின் உச்சம் என்று எண்ணுகின்றார்கள், இதனால் உண்மையான வாழ்க்கையான உடலின் இன்பத்தை இழக்கின்றார்கள். வாழ்க்கையின் உச்சம் உடலின் தேவையை பூர்த்தி செய்து மாயை உணர்வில் இருந்து விடுபட்டு ஆனந்தமாக வாழ்வதுதான். இந்த வாழ்க்கையை ஒரு சிலர்தான் சிறப்பாக வாழ்கின்றார்கள்.
ஆணும், பெண்ணும் சமம் அல்ல, யாரை விடவும் யாரும் உயர்ந்தவரும் அல்ல தாழ்ந்தவரும் அல்ல, இருவரும் இரு வேறு உயிர்கள் ஒன்று இல்லாமல் மற்றொன்றாள் இந்த உலகில் தனித்து வாழ முடியாது. ஆணை சார்ந்து தான் பெண்ணும், பெண்ணை சார்ந்து தான் ஆணும் வாழ முடியும் என்பது இயற்கையின் விதி. சூரியனை சுற்றி தான் பூமியும், பூமியை சுற்றி தான் சந்திரனும் என்பது போல் உயிர்களின் உணவு சங்கிலியும் வேறு ஒரு உயிரை சார்ந்து தான் இருக்கின்றது. எனவே இந்த பிரபஞ்சமே ஒன்றை ஒன்று சார்ந்து இயங்குவது தான் இயற்கையின் விதி.
உலகில் பெரிய கட்டுமானங்களை ஆண்களால் உருவாக்க முடியும், ஆனால் பெண்ணால் தான் ஒரு குடும்பத்தை உருவாக்க முடியும். குடும்பத்தின் உரிமையாளர் பெண்தான், ஆணை பெண் தன் துணையாக ஏற்கவில்லை என்றால் ஆண் அனாதையாகி விடுவான். இயற்கை ஆணுக்கு என்று ஒரு சக்தியையும், பெண்ணுக்கு என்று ஒரு சக்தியையும் கொடுத்திருக்கின்றது இதை புரிந்து கொள்ளாமல் பெண் ஆணை சார்ந்து வாழாமல் இருப்பதுதான் பெண் விடுதலை, சமத்துவம், சுதந்திரம், பகுத்தறிவு, முற்போக்கு சிந்தனை என்று சொல்லி பெண் குழந்தைகளின் வாழ்க்கையை பாழாக்கி விட்டார்கள்.
சிறுவயதிலேயே பெண் பிள்ளைகளின் மனதில் ஆணை சாராமல் வாழ்வதுதான் உயர்ந்த நிலை என்று சொல்லி நஞ்சை விதைத்து விட்டது இந்த சமுதாயம். அதன் விளைவாக அதிகம் படித்து அதிகம் சம்பாதித்து ஆணின் துணை இல்லாமல் தனித்து வாழ பழகிக் கொண்டார்கள்,இதன் விளைவாக முப்பது வயதை தாண்டியும் பல பெண் பிள்ளைகளுக்கு திருமணம் ஆகவில்லை. பிள்ளைகளை பெற்றெடுத்து ஆனந்தமான குடும்பத்தை உருவாக்கி வாழ வேண்டிய வயதில் பணத்தை சம்பாதிக்கும் இயந்திரமாக, மாயை உணர்வுக்கு அடிமையாக வாழ்கின்றார்கள், பாவம் இவர்களின் வாழ்க்கையை சீரழித்தது யார்? அறிவில்லாத முற்போக்குவாதிகள்தான், இந்த சமுதாயமும் தான்.
ஆணும், பெண்ணும் அறிவாளும் உடலாலும் உணர்வாலும் வேறுபட்டவர்கள் எனவே ஆணை சார்ந்து பெண்ணும், பெண்ணை சார்ந்த ஆணும் வாழும் வாழ்க்கை முறைதான் இயற்கையின் விதி. இந்த அறிவு சமுதாயத்தில் இல்லாததால் தான் ஜனநாயகத்துக்கு எதிராக பெண்களுக்கு தேர்தலில் இட ஒதுக்கீடு என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது.ஆணுக்கு மாற்றாக பெண்ணும், பெண்ணுக்கு மாற்றாக ஆணும் செயல்படவே முடியாது.
ஆணிடம் ஆண்மையும், பெண்ணிடம் பெண்மையும் எந்த அளவுக்கு அதிகமாக உள்ளதோ அந்த அளவிற்கு கணவன், மனைவி இருவரும் சேர்ந்து இன்பமான வாழ்க்கையை வாழ்வார்கள்.
ஆணும், பெண்ணும் சமம் என்ற தவறான புரிதலால் ஆண் பெண்ணை போலவும், பெண் ஆணைப் போலவும் வாழ்வதால் திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழ முடியாமல் பிரிந்து வாழ்கின்றார்கள்.
இந்த உலகில் சாதனையாளர்கள் என்று யாரும் இல்லை அனைவரும் விதியின் கையில் விளையாட்டு பொம்மைகள் தான். நடிகர் ரஜினிகாந்த் அதிகாரம் என்ற மாயை உணர்வுக்கு ஆசைப்பட்டு தேர்தலில் நின்று முதல்வராயிருந்தால் அவருடைய வாழ்க்கையில் உண்மையான உடலின் இன்பத்தை இழந்திருப்பார். இதுபோல் பல செல்வந்தர்கள் அதிகாரம், புகழ் என்ற மாயை உணர்வுக்கு ஆசைப்பட்டு உண்மையான உடலில் ஆனந்தத்தை, இன்பத்தை, குடும்பத்தை,அன்பை, பாசத்தை இழந்து விடுகின்றார்கள்.
உடலின் தேவையை அனுபவிப்பதால் மட்டுமே உண்மையான உணர்வை பூர்த்தி செய்ய முடியும், அறிவால் பூர்த்தி செய்ய முடியாது. ஞானியாக இருந்தாலும் அவருக்கு இது பொருந்தும். ஆனால் மாயை உணர்வின் விருப்பமான பதவி, அதிகாரம், புகழ்,சாதனை, தேவைக்கு மேல் செல்வம், வெளிநாடு சுற்றுலா, விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்துவது, விளைஉயர்ந்த ஆடை அணிவது போன்றவற்றை அனுபவிக்காமலேயே அறிவின் மூலம் இந்த உணர்வுகளை நிறைவு செய்து கொள்ளலாம்.
பணம் உள்ளவன் பணத்தை செலவு செய்து வாழ்க்கையை அனுபவிக்கட்டும், உடல் வலிமை உடையவன் ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிக்கட்டும், படிப்பாளி பதவியை அனுபவிக்கட்டும், யாரோடும் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள், ஒவ்வொரு மனிதனையும் இயற்கை தனித்துவத்தோடு படைத்திருக்கின்றது, உங்களுக்கான வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள். உடலின் உண்மையான உணர்வின் ஆசைகளை அனுபவித்த பிறகு மாயை உணர்வின் ஆசைகளை ஆளுமை செய்து அனுபவிப்பதால் மட்டுமே உண்மையான ஆனந்தத்தை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க முடியும்.
உங்களுக்கான அடையாளம் உங்கள் உடலோ, உங்கள் படிப்போ,உங்கள் பதவியோ, உங்கள் சாதனையோ, உங்கள் செல்வமோ,உங்கள் உடல் வலிமையோ அல்ல. உங்கள் செயல்பாடும், ஆளுமைப் பண்புகளும் தான் உங்களுடைய அடையாளம். எனவே மாயை உணர்வுகளை அறிவால் ஆளுமை செய்து வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை.

Leave a Reply