நான்


நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு, துறவு நிலையில் வாழ்ந்து பழகி, அதன் மூலம் கிடைத்த அனுபவத்தை அறிவாக வைத்து இந்த கட்டுரையை நான் எழுதி இருக்கின்றேன், நான் என்ற உணர்விலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி துறவு வாழ்க்கை முறைதான். துறவியாக வாழ்ந்து பழக வேண்டும் அப்போதுதான் நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு சிந்திப்பதால் ஞானத்தை அடைய முடியும். ஞானத்திற்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்பு இல்லை, ஞானத்திற்கும் துறவுக்கும் தான் தொடர்பு உண்டு.

துறவு என்பது அனைத்தையும் துறந்து காட்டில் வாழ்வதோ அல்லது பிச்சை எடுத்து வாழ்வதோ துறவு அல்ல.
ஆசையை துறந்தாலும் துறவு தான்,
ஆணவத்தை துறந்தாலும் துறவு தான்,
பதவியை துறந்தாலும் துறவு தான்,
அதிகாரத்தை துறந்தாலும் துறவு தான், பொறாமையை துறந்தாலும் துறவு தான், தொழிலை துறந்தாலும் துறவு தான், கன்னியாஸ்திரிகளை போல் குடும்ப வாழ்க்கையை துறந்தாலும் துறவு தான்,
நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு சிந்திக்க யாருக்கு எது தடையாக இருக்கின்றதோ அதை அவர்கள் துறந்தால் துறவி தான்.

விதியின் பயனால் துறவு என்னை துரத்தி பிடித்துக் கொண்டது, வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவங்களே என்னை துறவு என்ற உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றது. 1985இல் என்னுடைய 19 ஆவது வயதில் என்எல்சி நிறுவனத்தில் மின் ஒப்பந்ததாரராக பதிவு செய்து ஒப்பந்த பணிகளை எடுத்து செய்தேன், நான் சிறிய வேலைகளை மட்டுமே எடுத்து செய்ததால் சக ஒப்பந்ததாரர்கள் யாரும் என்னை ஒப்பந்ததாரராகவே மதிக்கவில்லை. இந்த நிகழ்வு நான் உயர்ந்த நிலைக்கு உயர வேண்டும் என்ற உந்துதலை எனக்கு கொடுத்தது, மற்றவர்களை விட பணம் என்னிடம் குறைவாக இருப்பதால்தான் என்னை மதிக்கவில்லை என்பதை நான் புரிந்து கொண்டேன், அதன் விளைவாக கடின உழைப்பால் பத்து ஆண்டுகளில் 1995 இல் நெய்வேலியில் முதன்மையான மின் ஒப்பந்ததாரராக நான் உயர்ந்தேன். அப்போது நான் எந்த சபைக்கு சென்றாலும் அங்கு எனக்கு மரியாதைகளும், அங்கீகாரமும் கிடைத்தது. அப்போது என்னுடைய அறிவு என்னிடம் சொன்னது உனக்கு கிடைக்கும் மரியாதை உனக்கானது அல்ல உன்னிடம் உள்ள பணத்திற்கு கிடைக்கும் மரியாதை என்று. சிறு வயதிலேயே பணத்தையும், அதிகாரத்தையும் அனுபவித்து விட்டதால் அதன் மீதான ஈர்ப்பு எனக்கு படிப்படியாக குறைந்து விட்டது.

2000த்தில் தொழில் உச்சத்தில் இருந்தபோது பணம் சம்பாதிப்பது மட்டும் வாழ்க்கை அல்ல வாழ்க்கையின் மற்ற பரிமாணங்களையும் கண்டறிய வேண்டும் என்று எண்ணி துறவியை போல் என் தொழிலை துறந்து சாதாரண மனிதனைப் போல் வாழத் தொடங்கினேன், இன்றளவும் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் 15 ஆண்டுகள் கடின உழைப்பால் உருவாக்கிய ஒரு நிறுவனத்தை, கப்பலை தரை தட்டி நிறுத்துவது போல் எப்படி தொழிலில் இருந்து விடுபட வேண்டும் என்று முடிவு எடுத்தேன் என்பதுதான். தொழிலை நான் விட்டதால் சமுதாயத்திலும் உறவுகள் இடையேயும் எனக்கான அங்கீகாரமும் மரியாதையும் குறைந்ததை நான் அறிந்தேன், இருப்பினும் துறவு வாழ்க்கையை நான் வாழ்வதால் என்னை அவைகள் பாதிக்கவில்லை.

சம்பாதித்த செல்வமே போதும் என்ற மனநிறைவோடு அமைதியான வாழ்க்கையை பத்தாண்டுகள் வாழ்ந்ததன் பயனாக 2010இல் வாழ்க்கையை பற்றிய என்னுடைய ஆய்வில் நம்முடைய சிந்தனையும், செயலும் நமக்கு கட்டுப்பட்டு இல்லை என்பதை நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு சிந்தித்ததால் அறிந்தேன். புத்தர் போதி மரத்தடியில் தவம் இருந்து ஞானத்தை பெற்றது போல் நான் 559/A என்ற என்னுடைய வீட்டில் தவமிருந்து ஞானத்தை பெற்றதாக உணர்ந்தேன். அது ஒரு அற்புதமான உணர்வு, இந்த உலகில் யாரும் அதை அனுபவித்து இருக்க முடியாத உணர்வு, அது விதியின் பயனால் எனக்கு கிடைத்தது. (விதியின் பயனால் என்றால் இறந்த கால நிகழ்வுகளின் தொடர்வினையால் என்று பொருள்) ஆய்வு செய்து எழுதி இருக்கின்ற புத்தகங்கள், கட்டுரைகள் அனைத்துக்கும் அந்த ஒரு நிகழ்வு தான் மூலக்காரணம். அந்த ஒரு நிகழ்வு என் வாழ்க்கையில் நடக்கவில்லை என்றால் நான் எந்த அளவுக்கு முட்டாளாக வாழ்ந்து கொண்டு இருப்பேன் என்பதை கற்பனை பண்ணி பார்ப்பதற்கே அச்சமாக உள்ளது.

என் பார்வையில் நான் புத்தரின் மறு அவதாரம்!
என் பார்வையில் புத்தர் அனைவரையும் போல் அவரும் விதியின் கையில் ஒரு விளையாட்டு பொம்மைதான்!

நான் பெற்ற ஞானத்தால் பயமில்லாமல், பொறாமையில்லாமல், ஆணவம் இல்லாமல், பேராசை இல்லாமல் வாழ்வது மிகவும் இலகுவாக ஆகாயத்தில் மிதப்பது போன்ற உணர்வை எனக்கு கொடுக்கின்றது. என்னை போல் நீங்களும் பயம், பொறாமை, ஆணவம், பேராசை இல்லாமல் இலகுவான வாழ்க்கை அனுபவத்தை பெற வேண்டும் என்றால் நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு துறவு நிலையில் வாழ பழகிக் கொள்ளுங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்த்துக்கள்!

Category: