திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் துரைமுருகன் இல்ல திருமண விழாவில் சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதி பிராமணர்களால் திருமணத்தை நடத்தி வைத்தது சரியா? தவறா? என்பதை ஆய்வு செய்து எழுதி இருக்கின்றேன் இந்த கட்டுரையில்.
தமிழர்களின் மொழி உரிமை, மாநில உரிமை, இன உரிமை என்று தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதே திமுகவின் அடிப்படைக் கொள்கையாக முன்வைத்து உருவான அரசியல் கட்சிதான் திமுக. கடவுளின் பெயரில் மனிதர்கள் இடையில் ஏற்றத்தாழ்வு இருப்பதை எதிர்க்க கடவுள் மறுப்பு, மொழி உரிமையை மீட்க சமஸ்கிருத, இந்தி மொழி எதிர்ப்பு, உயர்ந்த சாதியினருக்கு நிகராக தாழ்ந்த சாதியினரும் உயர வேண்டும் என்பதற்காக பிராமணர்கள் எதிர்ப்பு என்பதே திமுகவின் கொள்கையாகக் கொண்டு ஆட்சிக்கு வந்தது. ஒரு கொள்கையை முன்வைத்து அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை பிடித்து தன் வாழ்க்கையை உயர்த்திக் கொண்ட திமுக தலைவர்கள் யாராக இருந்தாலும் அந்த கொள்கைக்கு முரணாக நடந்து கொண்டால் அது தவறுதான். அது தவறு மட்டுமல்ல திமுகவின் கொள்கையை நம்பி இத்தனை நாள் வாக்களித்த தொண்டனுக்கும், மக்களுக்கும் செய்யும் மிகப்பெரிய துரோகம்.
துரைமுருகன் அவருடைய இல்ல திருமணத்தை சமஸ்கிருதத்தில் நடத்தியது தனிமனித உரிமை, விருப்பம் என்று விலகி சென்றுவிட முடியாது, காரணம் அவர் திமுகவின் பொது செயலாளர், மக்களிடம் இந்தியை எதிர்க்க வேண்டும், சமஸ்கிருதத்தை எதிர்க்க வேண்டும், பார்ப்பனர்களை எதிர்க்க வேண்டும், சீர்திருத்த திருமணங்களை தான் செய்ய வேண்டும், என்று மக்களிடம் தன்னுடைய இயக்கத்தின் கொள்கையை சொல்லும்போது மற்றவர் உரிமையிலும், விருப்பத்திலும் தலையிடக்கூடாது என்று துரைமுருகனுக்கு தெரியாதா? ஒரு கொள்கைவாதி மக்களிடம் தன் கொள்கைப்படி வாழ்ந்து காண்பிக்க வேண்டும் கொள்கை ஒன்று செயல் வேறு என்று வாழ்வது இழுக்கு.
ஒருவர் செய்த தவற்றை சுட்டிக்காட்டினால் சுட்டிக்காட்டியவர் செய்த தவற்றை சுட்டிக்காட்டுவது சரியான செயல் அல்ல, தொலைக்காட்சி விவாதத்திலும், சமூக ஊடகத்திலும் அரசியல் விமர்சகர்கள் பேசுவதை கேட்டால் மக்களை இவர்கள் முட்டாளாக தான் பார்க்கின்றார்கள் என்று எனக்குத் தோன்றுகின்றது, துரைமுருகனுக்கு ஆதரவாக பேசுபவர்கள் துரைமுருகன் தவறு செய்யவில்லை என்று விளக்கம் கொடுப்பதற்கு பதில் தி.க. தலைவர்களை பார்த்து நீங்களும் இதே போல் கொள்கைக்கு எதிராக தவறு செய்து இருக்கின்றீர்கள் என்று சொல்வது துரைமுருகன் செய்தது தவறுதான் என்பதை ஒப்புக் கொள்வது போல் உள்ளது.
நீதிமன்றத்தில் திருடனை பார்த்து நீதிபதி நீ திருடினாயா? என்று கேட்டதற்கு நான் மட்டுமா திருடினேன் எனக்கு முன் நிறைய பேர் திருடினார்கள் அவர்களை இந்த காவல்துறை பிடிக்கவில்லை என்று திருடன் சொன்னால், திருடன் திருட்டை ஒப்புக்கொண்டான் என்று நீதிபதி திருடனுக்கு தண்டனை கொடுத்துவிடுவார் காரணம் நீதிபதி அறிவாளி, ஆனால் மக்கள் முட்டாள்கள் என்பதால் தான் துரைமுருகன் செய்த தவற்றை மற்ற தலைவர்கள் செய்த தவற்றோடு ஒப்பிட்டு நியாயப்படுத்துகின்றார்கள் சுயநலவாதிகள்.
துரைமுருகன் உயர்ந்த பொறுப்பில் இருந்து கொண்டு ஏன் இந்த தவற்றை செய்ய வேண்டும்? இதுதான் நம் கேள்வி. பெரியாரைப் பற்றி நான் பலமுறை எழுதி இருக்கின்றேன் அவர் புரட்சியாளர், பகுத்தறிவு தந்தை அல்ல என்று, பெரியாருக்கு ஆன்மீகம் பற்றிய பகுத்தறிவு இல்லை, அதனால் தான் பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை அரசியல் ஆதாயத்திற்காக கடவுள் இல்லை என்பதை அவர் வழி வந்த அரசியல் தலைவர்களும், தொண்டர்களும் நம்பினார்களே தவிர கடவுள் இல்லை என்பதை யாரும் பகுத்தறிவால் புரிந்து கொள்ளவில்லை. கடவுள் இல்லை என்பது புரிதலாக இல்லாமல் நம்பிக்கையாகவே இருப்பதால்தான் பலரும் நாத்திகத்தில் இருந்து ஆத்திகத்திற்கு சென்று விடுகின்றார்கள்.
பெரியாருக்கு ஆன்மீகம் பற்றிய அறிவு இல்லை, அதனால் தான் அவரும் கடவுள் இல்லை என்று நம்பினார். நம்பிக்கை என்பது அறியாமையின் வெளிப்பாடு, புரிதல் என்பது அறிவின் வெளிப்பாடு, கடவுளைப் பற்றிய புரிதல் நாத்திகனிடம் இல்லாததால் வாழ்க்கையில் துன்பம் வரும்போது, பயம் வரும்போது கடவுளை நம்புகின்றான்.
துரைமுருகன் பயத்தால் கொள்கையை மறந்து கடவுளை நம்பி விட்டார், கடவுளின் மொழியாக சமஸ்கிருதத்தை நம்பி விட்டார், பாவம் துரைமுருகன் துன்பத்தில் இருக்கின்றார் அவரைப் பார்த்து நான் பரிதாபப்படுகின்றேன்.
திராவிட கழகத்தினரும், திராவிட முன்னேற்ற கழகத்தினரும் கடவுள் இல்லை என்ற உங்களுடைய கொள்கையில் உறுதியாக இருப்பதற்கு ஆன்மீகம் பற்றிய அறிவு தேவை, இந்த அறிவை பெரியார் உங்களுக்கு கொடுக்கவில்லை அதனால் தான் உங்களில் பலர் கொள்கைக்கு எதிராக கடவுள் இருக்கு என்று நம்புகின்றீர்கள். நான் எழுதிய “குமார் விதிகள்” என்ற புத்தகத்தையும் நான் எழுதிய கட்டுரைகளையும் படியுங்கள் நிச்சயம் நீங்கள் கொள்கை பிடிப்போடு வாழ என்னுடைய எழுத்துகள் உதவியாக இருக்கும்.

Leave a Reply